தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு இடமாக இருந்து வந்த முல்லைத்தீவு, குருந்தூர் மலையில், நேற்று புத்தர் சிலை நிறுவப்பட்டு புதிய விகாரை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு- குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஏற்பாட்டில், தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்கு பௌத்த விகாரையை அமைப்பதற்கான வழிபாடுகள் நேற்று முன்தினம் இரவு பிரித் ஓதலுடன் ஆரம்பமாகின.
இதையடுத்து நேற்றுக்காலை குருந்தாவசோக ரஜமாஹா விகாரையை அமைப்பதற்கான வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
நூற்றுக்கணக்கான சிறிலங்கா படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் 30 பௌத்த துறவிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், புத்தர் சிலை நிறுவப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விகாரை அமைப்பதற்கான வழிபாடுகள் இடம்பெற்ற போது, தண்ணிமுறிப்பிலிருந்து குமுழமுனை செல்லும் வீதியில் படையினர் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.