சிறிலங்காவில் செப்டம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் சுமார் 20,876 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலை தெளிவுபடுத்தக்கோரி அரச மருத்துவர் சங்கம் குறித்த நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் எந்த தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பீட்டை வெளியிட்டுள்ளது என்ற கேள்வியை அரச மருத்துவர் சங்கம் இந்த கடிதத்தின் ஊடாக எழுப்பியுள்ளது.
அதேநேரம் நாட்டில் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மட்டுமே இதுபோன்ற நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் முதலாவது கொரோனா அலையின் போது இவ்வாறு கணிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும் சுகாதார பிரிவினரால் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற தவறியதால் கடந்த சில நாட்களில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு நாடு அவ்வாறான ஒரு ஆபத்தான கட்டத்தை அடையாதிருக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.