அவுஸ்ரேலியாவில் பேர்த் நகருக்கு அருகேயுள்ள Yongah Hill குடிவரவுத் தடுப்பு முகாமில் 20 மீற்றர் நீளம் கொண்ட சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
320 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இந்த தடுப்பு முகாமில், 140 தஞ்சக் கோரிக்கையாளர்களான அகதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனையவர்கள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், நாடு கடத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தங்குமிட அறை ஒன்றில் இருந்து இரண்டு பாதுகாப்பு வேலிகளை தாண்டி அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை, வெளிப்புற வேலியருகே முடிக்கப்படாத நிலையில் இருந்துள்ளது.
3 அடி ஆழத்தில் 5 மீற்றர் சுற்றளவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தடுப்பு முகாமில் இருந்து தப்பிச் செல்லும் நோக்கில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.