ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த, சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரி ரகோத்தமன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
சென்னை கே.கே நகர் பகுதியில், வசித்து 72 வயதுடைய சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமனுக்கு, பத்து நாட்களுக்கு மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னரே, கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை வயது மூப்பின் காரணமாக கொரோனா தாக்கத்தில் இருந்து மீளமுடியாமல் உயிரிழந்துள்ளார்.
36 ஆண்டுகளாக சிபிஐ.யில் பணியாற்றி ஓய்வுபெற்ற ரகோத்தமன், ராஜிவ் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்தவர்.
அத்துடன், ராஜிவ்கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
ஊடக விவாதங்களில் பங்கேற்று வந்த அவர், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 7 பேரை விடுவிப்பதற்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.