இறுதி யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைக்கூட மதிக்காமல் நினைவுத்தூபியையும் அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததைக் கண்டித்தும் நினைவேந்தல் நிகழ்விற்கு தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதையும் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இழந்தவர்களை நினைவு கூர்வதற்கே தமிழர்கள் போராட வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“நடந்து முடிந்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்களை நாங்கள் இழந்திருக்கிறோம். அதேபோல் இறுதி யுத்தத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்த பொதுமக்களின் நினைவுகளை மீட்டிக்கொள்வதும் அவர்களை கௌரவப்படுத்துவதும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும். சர்வதேச சட்டவாயங்களின் அடிப்படையில் இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.
ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்களை நினைவுகூர்வதாக இருந்தாலும் சரி, போராளிகளை நினைவுகூர்வதாக இருந்தாலும்சரி பலத்த போராட்டத்தின் மத்தியிலேயே இத்தகைய நினைவுகூர்தலை நாங்கள் செய்ய வேண்டியிருக்கின்றது.
கொரோனா என்பது ஒருபக்கம் இருக்க, ஊர்வலங்களாக இருந்தாலும்சரி, உண்ணாவிரதங்களாக இருந்தாலும்சரி ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு சிறிய பெரிய போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தாலும்சரி உடனடியாகவே பொலிசார் நீதிமன்றங்களை அணுகி தடையுத்தரவைப் பெறுவது என்பது வாடிக்கையாகிவிட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.