சிறிலங்காவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து அடுத்த சில நாட்களில் சீனா முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், சிறிலங்காவின் அவசர தடுப்பூசித் தேவைக்கு சீனா பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று சீனத் தூதுவர் கீ சென்ஹோங், சிறிலங்காஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் உறுதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் முக்கியமான சில முன்னேற்றங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், அந்த கீச்சகப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.