அமெரிக்காவின் (America) ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது அடுத்த தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்க, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் (Developers Conference), ஆப்பிளின் அடுத்த ஐபோன் (Apple iPhone) தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, திறந்த செயற்கை நுண்ணறிவின் (Open AI) பிரபலமான “சட்ஜிபிடி“ (Chat GPT) செயற்கை நுண்ணறிவு செயலியை ஐபோன் கையடக்க தொலைபேசிகளில் சேர்க்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
அதேபோல், குரல் மூலம் செயற்படுத்தக்கூடிய “சிறி” (Siri) செயலி ஊடாக ஆப்பிள் கையடக்க தொலைபேசிகளின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு பதிலளிக்க முடியும் என ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் (Tim Cook) தெரிவித்துள்ளார்.அந்தவகையில், ஆப்பிள் இந்த வழியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும்போது, ஐபோன் கையடக்க தொலைபேசியின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.