தம் வாழ்நாள் முழுமையும், பொதுவுடைமைக் கொள்கைக்காக ஒப்படைத்து பாடுபட்ட தோழர் பாண்டியன் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என மதிமுக பொதுச் செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் அவர், பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாட்டின் பொது வாழ்விற்கும், இலக்கிய உலகத்திற்கும், ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில், தன்னிகரற்ற சொற்பொழிவாளர்; ஆற்றொழுக்குப் போல, தங்கு தடையின்றி, தமது கருத்துகளை எடுத்துரைப்பவர்,
மிகச்சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி. எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதி இருக்கின்றார். தோழர் ஜீவாவின் பேரன்பைப் பெற்றவர்.
பொதுவுடைமைக் கட்சி நடத்திய அத்தனை போராட்டக் களங்களிலும் பங்கேற்றவர்.
வழக்கறிஞர் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்துரைத்து, பாண்டியன் அரிய கருத்துரைகளை நிகழ்த்தினார்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





