முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

1551

கூட்டமைப்பின் தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டது என்று தாங்கள் தேர்தல் காலத்தில் கூறியிருந்த நிலையில், உண்மையும் அதுதான் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று எங்களுடைய மக்கள் ஒரு வருடத்துக்கு மேலாக வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் எனவும், இந்த நிலைமைக்கு கூட்டமைப்பின் தலைமை பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூட்டமைப்பு அழிய வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்ட தரப்பு தாங்கள் இல்லை எனவும், இதை நான் பகிரங்கமாக மேடைகளில் கூட கூறியிருப்பதாகவும், தமிழ் அரசுக் கட்சி காலாகாலத்துக்கும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்ற போதிலும், கூட்டமைப்பை வழிநடத்தி தமிழர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் மக்கள் முன்வந்து பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொறுப்புக்கூறல் நடைபெறாமல் தாங்கள் கூட்டமைப்புடன் சேருவது சாத்தியப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வழிநடத்துகின்ற விதம் தொடர்பாக வடக்கு கிழக்கில் ஒரு விதமான விமர்சனம் இருக்கிறது என்பதையும், கூட்டமைப்பு தொடர்ந்தும் தங்கள் மத்தியில் தலைமையாக இருக்கவேண்டுமா என்ற கேள்வி பரவலாக மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது என்பதையுமே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன எனவும் அவர் விபரித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது எனவும், அந்த அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமைத்துவம் வழிகாட்டி வந்திருக்கின்ற பாதை தொடர்பில் மக்களுக்கு கணிசமான சந்தேகமும் விரக்தியும் ஏற்பட்டிருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது எனவும் அவர் கூறியுளளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய கொள்கையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்ற நிலைப்பாட்டை வெறுமனே எதிர்ப்பு அரசியலுக்கு மாத்திரம் கொண்டு செல்லாமல், ஆக்கபூர்வமாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னுக்கு கொண்டு செல்லக்கூடிய தங்களைப் போன்ற தரப்புகளுக்கு வாக்குகள் வந்து சேரவேண்டும் என்ற கோணத்தில் திட்டங்களை வகுக்காவிட்டால், இதில் இருக்கின்ற ஆபத்து பாரியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கணிசமானதொரு எழுச்சியைப் பெற்றிருப்பதுடன், இந்த எழுச்சி முஸ்லிம் விரோத போக்கின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கிறது எனவும், எனவே ஆக்கபூர்வமான முன்னேற்றகரமான தமிழ்த் தேசிய அரசியலை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதுடன், முஸ்லிம் மக்களோடு இருக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையிலும், அந்த பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரும் வகையிலும் எங்களுடைய பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *