முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு

1104

வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவினால் கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்தும் இன்னல்களுக்கும் இனவழிப்புக்கும் முகங்கொடுத்து ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்துவரும் ஓர் தேசிய இனத்தின் ஆன்மாவை சிதைக்கின்ற கருத்துக்களைக் கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியை உமிழும் ஓர் மிலேச்சத்தனமான அரசியற் பகடையாட்டத்தை காலாகாலமாக சிங்கள ஆட்சியாளர்கள் ஆடி வந்திருக்கிறார்கள்.

தாம் அடிப்படையிலேயே வரித்துக்கொண்ட பௌத்த சிங்கள தேசிய வாத மனோநிலையிலிருந்து சற்றேனும் இறங்கி வரத்துணியாத சிங்கள ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்பையும் மேலாதிக்கத்தையும் தக்க வைத்துக்கொள்வற்காக இந்த ஏற்றுக்கொள்ளவியலாத எரிச்சலூட்டும் வியாக்கியானங்களை ஓர் இருட்டடிப்பு உத்தியாக பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

‘யாழ் மக்கள் எதைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்பதைப் பற்றி அலட்டிக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை’ என்று 80 களில் ஜயவர்தன கூறியது போன்றே தற்போதைய ஆட்சியாளரும் தமிழ் மக்களுக்கு விசனமூட்டும் வண்ணமாக கிளிநொச்சியிலே கருத்துக்களை கொட்டியிருக்கின்றார்.

இலங்கையில் மீளிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளும் தந்திரோபாய சொல்லாடல்களை உபயோகிப்பதன் மூலம் தாமும் தமது அரசும் சிங்கள எதேச்சாதிகார சிந்தனைகளுக்கு முண்டு கொடுக்கும் கைங்கரியத்தை கச்சிதமாய் சாதிக்க முனையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜெனிவாவில் இலங்கைக்கெதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையும் நீர்த்துப்போகச் செய்வதற்கான இராஜதந்திர மதிநுட்பத்தையும் பிரயோகிக்க முற்படுகின்றார்.

அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக தொடர்ச்சியாக காண்பிக்கப்படும் மெத்தனப்போக்கு, நீண்டதொரு அல்லலாயத் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பான கரிசனையின்மை, போரின் பாதிப்புக்களிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களின் வாழ்வியற் பிரச்சனைகள், தமது நிலங்களுக்காக நடுவீதியிலிறங்கி போராடும் மக்களின் துயரம், தீர்வினை நோக்கிப் பயணிப்பதாகக் கூறும் அரசியலமைப்பு பற்றியதான பகற்கனவுகளுடன் தீராத தமிழர் தாயகத்தின் அவலங்களையெல்லாம் கிடப்பில் போட்டு விட்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக மன்னித்தல் மற்றும் மறத்தல் என்ற புதிய வியாக்கியானம் ஒன்றை கிளிநொச்சியில் பிரதமர் கூறியுள்ளார். 1970களிலிருந்து தமது கட்சி சார்ந்த அரசு தமிழர்களுக்கு எதிராய் இழைத்த கொடுமைகளையிட்டு ஒப்புக்காகவேனும் இன்னும் மன்னிப்புக்கோரவில்லை என்ற கசப்பான உண்மையை நினைவூட்ட விரும்புகின்றோம்.

போரின் இறுதிக்கணங்களில் இலட்சக் கணக்கான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியழுதபோது அதைக் கண்டுகொள்ளாத சர்வதேசம் 10 ஆண்டுகளுக்குப் பின் மானுடத்திற்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கெதிரான விசாரணைகளை நடத்தும் அல்லது தீர்வுகளை முன்வைக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போன இடைவெளியொன்றில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அப்படியான பொறிமுறையொன்று இலங்கைத் தீவில் தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கிடையிலான உறவில் மேலும் விரிசல்களை நோக்கியே நகர்த்தும் என்பதோடு சாத்தியமான மீளிணக்கம் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கி நகரப்போவதில்லை என்பதையும் கோடிட்டு காட்ட முனைகின்றோம்.

போர்க்குற்றங்கள் பற்றி தொடர்ந்து பேசுவதானால் இருதரப்பும் வழக்குகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம் என்ற ரணில் விக்கிரமசிங்காவின் கூற்று எந்த மன்றில் அப்படியான வழக்குகளை தாக்கல் செய்யலாம் என்ற சந்தேகத்தையும் எமக்குள் எழுப்புகின்றது.

போர்க்குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்களை ஓர் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் விசாரிக்கும் ஏற்பாடொன்று செய்யப்பட்டால் இது வரையில் எமது மக்களுக்கான உயிர்த்தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களை செய்தவர்கள் என்ற வகையில் ஜனநாயகப் போராளிகளான நாம் எமது போராளிகளின் சார்பில் எந்தவொரு மன்றையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

அப்படியான நிலை ஒன்று ஏற்படுமிடத்து கடந்த 5 தசாப்தங்களாக தமிழினத்திற்காய் இழைக்கப்பட்ட பண்பாட்டியல் சிதைப்பு பொருண்மிய ஆக்கிரமிப்பு நீதிக்கு புறம்பான கொலைகள் வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை சிங்கள அரசுக்கும் உண்டு என்ற யதார்த்தமான உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *