முக்கிய செய்திகள்

அமைச்சர்களை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே என்கிறார் விக்னேஸ்வரன்

477

மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் உள்ள அமைச்சர்களை நியமித்தல் மற்றும் பதவி இறக்குவதை தீர்மானித்தல் என்பது முதலமைச்சர்களைச் சார்ந்த விவகாரம் என்பதே தமது நிலைப்பாடு என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 126ஆவது அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில், இதில் கருத்து தெரிவித்த அவர், எந்த ஒரு மாகாண முதலமைச்சரும், தமது அமைச்சர்கள் வாரியத்தின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை மேன்முறையிட்டு நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று கூறி, டெனீஸ்வரனின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ, டெனீஸ்வரன் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள் எனவும், ஆனால் இந்த தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெனீஸ்வரனை சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும் என்பதுடன், இது சட்டத்திற்குப் புறம்பானது எனவும், ஆறு பேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும் என்பதுடன், சட்டவலுவற்றதாக அமையும் எனவும், அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால், அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மால் இயைந்து அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது எனவும், ஆகவேதான் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.

இந்த வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களே எனவும், உண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசியல் யாப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிப்பது மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *