ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையிடுகிறார் – சிறீதரன்

1145

வடமாகாண ஆளுநர் மாகாண அதிகார வரம்பிற்குள் தலையீடு செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்மையில் பூநகரி பிரதேச செயலாளருடன் கௌதாரிமுனை பகுதிக்கு சென்றிருந்த சிறிதரன், அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்திட்டங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேசமும், கௌதாரிமுனைப் பகுதியும் தமிழர்களின் தொன்மை வரலாறுகளைக் கொண்டு காணப்படுகின்ற போதிலும், இன்று இந்த வரலாறுகளை முழுமையாக இல்லாமல் ஆக்குவதற்கு பல முனைப்புக்களில் பலர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தில் பொன்னவெளிப்பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முருகற் பாறை அகழ்விற்கு வந்ததையும் சுட்டிக்காட்டிய அவர், எங்களிடம் வடக்கு மாகாண சபை இருக்கும் போது, எங்களின் கனிய வளங்களை அழிக்கும் நோக்கில் வடக்கு ஆளுநர் இப்பகுதியிலே மாத்தறைப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கபானா வகை சுற்றுலா விடுதி அமைப்பதற்க்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச சபையை பணித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தான் எம் மீதான இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது எனவும், இவற்றுக்கு எல்லாம் அப்பால் எங்களுடை விடுதலை போராட்ட வரலாற்றை கூட பூநகரி மண் பேசும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாவீரர்கள் இந்த விடுதலைப்போராட்டத்தில் மடிந்தார்கள் என்பதையும் நினைவூட்டியுள்ள அவர், மாவீரர்களின் கனவுகள் நிறைவேற நாங்கள் எங்களுக்குள் ஒர் அணியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

பூநகரிக்கான இந்த பயணத்தின் போது சிறிதரனுடன் பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன், கட்சியின் பெரியபரந்தன் அமைப்பாளர் ஜதீஸ், உருத்திரபுரம் பிரதேச அமைப்பாளர் திலக்சன், கிராம சேவையாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் மக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *