இலங்கை சனாதிபதியின் ஐ. நா.பொதுசபை உரை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது

641

ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிகளில் இருந்து சனாதிபதி பின்வாங்குவதாக தாங்கள் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு இலங்கை அனுசரணை வழங்கி இருக்கிறது என்பதையும், இந்த பிரேரணைகளில் இலங்கையின் மறுசீரமைப்பு பொறிமுறை செயலாக்கத்தில் அனைத்துலகத்தின் பங்களிப்பு குறித்து உறுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இதனை மீறி, அனைத்துலக தலையீடு இல்லாமல் இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள இடமளிக்குமாறு சனாதிபதி கோரி இருக்கின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் போர்க் குற்றச்சாட்டுகள் இருக்கின்ற படைத்தரப்பினரை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்ப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *