முக்கிய செய்திகள்

“எழுக தமிழ்” தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை (23-09-2016)

1962

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற இருக்கும் “எழுக தமிழ்” மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

* எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இப்பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் – யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை சென்றடையும்.

* இப்பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டிகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வருவோர் பேரணியில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இப்பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் உணவுச் சாலைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள் என்பவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், மற்றும் நிறுவனங்களை பூட்டி பேரணியின் வெற்றிக்கு ஒத்துழைக்குமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

* தமிழ் மக்களின் பேராதரவுடன் நடைபெற இருக்கும் இப்பேரணியை குழப்பும் நோக்குடன் சிலர் விசமத்தனமான பிரச்சாரங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் எம்மால் அறிய முடிகின்றது. குறிப்பாக ஒரு சில ஊடகங்கள் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

* இதேவேளை கூட்டுப் பேரணி என்ற வகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனற பெயர் குறிப்பிடப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இத்தகய சுவரொட்டிகள் யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை ஆயினும், இதற்கும் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் பேரணிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை, தமிழ் மக்களின் நலன் சார்ந்து பேரவையால் முன்மொழியப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அதனை ஆதரிப்பவர்கள் எவராயினும் இப்பேரணியில் கலந்து கொள்ள முடியும்.

எனினும் இப்பேரணி அரசியல் கட்சி சார்பற்றது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தமிழ் மக்களின் உரிமையை அகிம்சை வழியில் வலியுறுத்தும் இப்பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணி திரண்டு பங்கேற்குமாறும் கேட்டு நிற்கின்றோம்.

தமிழ் மக்கள் பேரவை
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *