முக்கிய செய்திகள்

கைபற்றிய சான்றுப் பொருட்கள் எம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல” தம்மீது சுமத்தப்பாட்ட குற்றச்சாட்டை முன்னாள் போராளிகள் மறுப்பு

879

அண்மையில் கிளிநொச்சி மற்றும் ஏனைய மாவட்டங்களில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் போராளிகள் ஐந்து பேரையும் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய பொழுது சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைபற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிருந்த போதும் அதனை மன்றில் சமர்ப்பிக்க முடியவில்லை என அவர்கள் சார்பில் தோற்றிய சட்டத்தரணிகளில் ஒருவரான தில்லையம்பலம் அர்ச்சுனா தெரிவித்தார்

இன்றைய தினம் குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான தில்லையம்பலம் அர்ச்சுனாவிடம் வழக்குத் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் குறித்த வழக்குத்தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கைது செய்யப்பட்ட B4717 சந்தேக நபர்களாக முருகையா தபேந்திரன் ,லூவிஸ்மரியநாயகம் அயந்தன் ஆகியோரையும் B4317 சந்தேக நபர்களாக காராளசிங்கம் குலேந்திரன் ,வேலாயுதம் விஜயகுமார் ஆகியோரையும் மற்றும் B4917 சந்தேகநபரான ஞானசேகரம் ராஜ்மதன் ஆகியோரை வெவ்வேறு வழக்கு இலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்தாலும் இவர்கள் மீது ஒரே சட்டத்தின் கீழ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் B அறிக்கை மூலம் நஞ்சுகள் மற்றும் அபின் அபாயகர ஔடதங்கள் சட்டப் பிரிவின் கீழும் அபாயகரமான ஆயுதங்களின் சட்டப்பிரிவின் கீழுமே வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது

மேற்குறித்த சட்டங்களான நஞ்சுகள் மற்றும் அபின் ,அபாயகர ஔடதங்கள் சட்டப் பிரிவு 54 அ ,ஆ ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையாலும் அபாயகரமான ஆயுதங்களின் சட்டப்பிரிவின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையால் கௌரவ நீதவான் நீதிமன்றிற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் இல்லை . அதனால் கௌரவ நீதவான் நீதிமன்றில் பிணை விண்ணப்பத்தினை செய்யமுடியாத நிலை காணப்படுகிறது. அத்துடன் பிணை விண்ணப்பமானது கௌரவ யாழ் மேல் நீதிமன்றில்தான் செய்யமுடியும்

குறித்த குற்றச்சாட்டிற்கு சந்தேக நபர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை தாம் செய்யவில்லை எனவும் கைப்பற்றிய சான்றுப் பொருட்கள் தம்மிடமிருந்து எடுக்கப்பட்டவை அல்ல எனவும் தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் எமக்கு தெரிவித்திருந்த போதும் இது தொடர்பான விண்ணப்பங்கள் வழக்கு விளக்கத்திற்கு நியமிக்கப்படுகின்ற தினங்களிலையே செய்துகொள்ள முடியும்.

தற்பொழுது வழக்கானது புலன்விசாரணைக்குரிய காலமாக வழக்கை தொடுத்த தரப்பான பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விண்ணப்பம் செய்துள்ளனர். புலன்விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் B அறிக்கையில் காணப்படுகின்ற சட்டப்பிரிவுகளை மையமாக வைத்தே கௌரவ நீதவான் நீதிமன்றில் நடவடிக்கைகள் எடுக்க முடியும். அதனால் குறித்த சந்தேக நபர்களுக்கான பிணை விண்ணப்பமானது கௌரவ நீதவான் நீதிமன்றில் செய்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தாம் அக்குற்றங்களை புரியவில்லை எனவும் எமக்கு தெரிவித்திருந்த போதும் பிணை விண்ணப்பமானது யாழ் மேல் நீதிமன்றில்தான் கோர செய்யமுடியும் என்பதே காரணமாகும் எனவும் தெரிவித்தார்

அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் இரண்டாம்மாதம் பதின்மூன்றாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் B4717, B4917 ஆகிய சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறும் மன்று பணித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *