முக்கிய செய்திகள்

தூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் Bar!

1736

டில்லி மற்றும் சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டை எதிர்த்து பலர் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது போல் இனி வரும் காலங்களில் தூய்மையான காற்றைப் பெறுவதற்கு நாம் கண்டிப்பாகப் பணம் கொடுத்தாக வேண்டிய நிலை வரும்.
அதன் முதல் கட்டமாகத் தலைநகர் புதுதில்லியில் பார் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதாவது தூய்மையான காற்றைப் பெறுவதற்கான ஆக்ஸிஜன் பார். இதனை ஆக்ஸிப்யூர் என்று அழைக்கிறார்கள். இங்கு 15 நிமிடங்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் 299 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பாரில் விற்பனை மந்தமாக இருந்தது. எப்போது காற்று மாசுபாடு அதிகமானதோ அன்றிலிருந்து காற்று வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
எலுமிச்சை, லாவெண்டர், செர்ரி, யூகலிப்ட்ஸ் மற்றும் பல நறுமணம் கொண்ட வகைகள் உள்ளன. நீங்கள் வீட்டிற்கும் வாங்கிச் செல்லலாம். ஆமாம். ஆக்ஸிஜனை கேனில் அடைத்து தருகிறார்கள். அதற்கு சற்று கட்டணம் அதிகம்.
இங்கு நாம் காற்றைச் சுவாசிக்கச் சென்றால் ஒரு குழாயை வழங்குகிறார்கள். இதனை வைத்து நாம் ஆக்ஸிஜனை உள்ளே இழுக்க வேண்டும். இதனை நம்முடைய நாசி அருகே வைத்து உள்ளே இழுக்கும் போது காற்று நம் உடலினுள் செல்கிறது.
இந்தத் தூய்மையான காற்றினை உபயோகப்படுத்தினால் சைனஸ் பிரச்னை குறைவதாகவும், தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் நன்றாக தூங்குவதாகவும், மனச்சோர்வு இல்லாமல் புத்துணர்வுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள் பார் நடத்துபவர்கள்.

வாடிக்கையாளரான ஜோஷியிடம் கேட்ட போது சொன்னார்:
“நான் இந்த வழியாகச் சென்றேன். காற்று விற்பனைக்கு என்பதைப் படித்தவுடன் உள்ளே சென்று என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம் என்ற தயக்கத்துடன் தான் சென்றேன். 15 நிமிடம் எலுமிச்சை நறுமணத்துடன் காற்றைச் சுவாசித்தேன். சோர்வான உடம்பை சுறுசுறுப்பாக்குவது போன்று இருந்தது. புத்துணர்ச்சியை உணர்ந்தேன். ஆனால் பணம் அதிகமாக உள்ளது” என்றார்.
இந்தச் செயற்கை காற்றைச் சுவாசிப்பதால் உடலுக்கு எந்தக் கெடுதலும் கிடையாது. ஆனால் எவ்வளவு தான் பணம் கொடுத்து நாம் காற்று சுவாசிக்க முடியும். 15 நிமிடம் பணம் கொடுத்துக் காற்றை சுவாசித்து விட்டு வெளியே வந்தால் மாசு காற்றைத் தானே சுவாசிக்கிறோம். அப்போது நாம் செலவழித்த பணமும் வீணாகத்தானே போகிறது என்கிறார்கள் சுவாச மருத்துவர்கள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *