தேர்தல் காலத்தில் மக்களைக் கவர்வதற்காக பொய்யான கதைகளை மேடைகளில் அவிழ்த்து விடடதாக இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார்

495

மகிந்த ராஜபக்‌சவால் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று முன்னர் தான் கூறியது, வெறுமனே மேடையைக் கவருவதற்கான அரசியல் பேச்சு என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததாக, உறுதியான தகவல்கள் எவையும் இருந்ததில்லை என்றும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்‌சவின் கீழ் அமைச்சராகப் பணியாற்றிய சிறிசேன, 2015ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த சனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அவரிடமிருந்து பிரிந்து, பொது வேட்பாளராகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தன்னையும் தனது குடும்பத்தையும் கொல்வதற்கு ராஜபக்‌ச தரப்பினர் முயல்கின்றனர் என்பதை முக்கியமான பிரசாரப் பொருளாகக் கொண்டிருந்த அவர், பிரசாரங்களின் போது குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்து, கவனத்தை ஈர்த்திருந்தார் என்பதுடன், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, சனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் கூட, அதே கருத்துகளை கூறிவந்தார்.

இந்த நிலையில் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியுள்ள சனாதிபதி சிறிசேன, அவ்வாறான நிலைமை உண்மையில் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறான கொலை அச்சுறுத்தலை வழங்கிய ராஜபக்‌சவை, எவ்வாறு பிரதமராக நியமித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அவை அரசியல் மேடைகளில் உளறப்பட்ட, வெறுமனே அரசியல் கதைகள் எனவும், அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சதியே தன்னைக் கொல்வதற்கான உண்மையான சதி முயற்சி என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2015ஆம் ஆண்டு இடம் பெற்ற சனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ச வென்றிருந்தால், தானும் தனது குடும்பமும் ஆறடிக்குள் சென்றிருக்கும் என்று முன்னர் தெளிவாக கூறியுளள்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னைக் கொலை செய்வதற்கு ராஜபக்‌சக்கள் முயற்சி செய்தார்கள் என்று நம்பத்தகுந்த அறிக்கையேதும் இருக்கவில்லை எனவும், தேர்தல் பிரசார மேடைக்குள் ஒருவர் செல்லும் போது, மக்களைக் கவர்வதற்காகக் கூறும் கருத்துகள் அவை என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *