பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும், உள்ளத்தாலும் நானும் தமிழச்சிதான்

953

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு பல்வேறு சினிமா துறையினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனது ஆதரவை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக்கிறது.

நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்காவிட்டாலும் எனக்கு ஒரு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் பெற்று தந்தது இந்த தமிழ் மண்ணும், தமிழ் மக்களும்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக நிற்பேன் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாச்சாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தை காட்டும் என நம்புகிறேன்.

அவர்களின் பொய்யான வாதத்தை உண்மை என்று நம்பிய நமது நீதி மற்றும் அரசு துறைகளுக்கும் நம் குரல் கேட்கும் என நம்புகிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எடுத்து இருக்கும் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை நிச்சயமாக தமிழக கலாச்சாரத்தின் பெருமையை உலகமெங்கும் ஒலிக்க செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு, தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து இந்த இளைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஒரு சராசரி குடிமகளாக நான் அவர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். இவர்களின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை, எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *