முக்கிய செய்திகள்

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மக்கள் பிரதிநிதிகளுக்கே – விக்னேஸ்வரன்

1122

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பும், அதனை நிர்வகிக்கும் அதிகாரமும் மாகாண மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முதலமைச்சர் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

1987ம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்பாட்டின் அடிப்படையிலும், அப்போதைய 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலும் அரசாங்க அதிபர்களும் மாவட்ட செயலாளர்களும் மாகாண நெறிப்படுத்தலின் கீழ் இருந்தார்கள் என்ற போதிலும், அந்த முறை 1992ல் மாற்றப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வெகுவிரைவில் வரவிருக்கும் தற்போதைய தருணத்தில், பல் நிர்வாக அலகுகளை நீக்கி ஒற்றுமைப்பட்ட ஒரே மாகாண நிர்வாகம் நடைபெற வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட்பிரதிநிதிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இந்திய நாட்டின் அதிகார அலகுகளின் ஆளுநர்கள் போலவே, இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும் என்றும், இதற்கு மாறாக அவர்கள் ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் அதிகார அலகு, அரசாங்க அதிபர்கள் அதிகார அலகு, மாகாண அலகு என இன்று மூன்று அதிகார அலகுகள் வடமாகாணத்தில் நடைமுறையில் இருக்கின்றன என்றும், இவற்றில் முதல் இரண்டும் முறையே சனாதிபதியின் முகவராகவும் மத்திய அரசாங்கத்தின் நெறிப்படுத்தலுக்கு உட்பட்டவர்களாகவும் இருப்பதனால், கூடிய அதிகாரங்களை அவர்களே பரிபாலிக்கக் கூடியதாக உள்ளது என்றும் அவர் விபரித்துள்ளார்.

உண்மையில் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் எண்ணம் மத்திக்கு இருக்குமானால், முழுமையான அதிகார பீடமாக மாகாணசபையை மாற்ற வேண்டும் என்றும், மத்திக்கும் மாகாணத்திற்கும் ஒருங்கியலும் நிரல் என்ற ஒன்று இருக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை வடமாகாணத்தின் தேவைகளையும் ஏழ்மையையும் பாதிப்புக்களையும் முன்வைத்து மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் வியாபாரம் செய்வதையும், வடக்கு மக்களின் தேவைகளைத் தான்தோன்றித் தனமாக தாமே நிர்ணயிப்பதையும், முதலீடுகளுக்குத் தமக்கு முற்பணம் தரவேண்டும் என்று லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியானது ஒரு தந்தை போன்றிருந்து அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புவதாகவும், வடமாகாணசபையின் கடமைகளை அவர்கள் போட்டிழுத்துக் கொண்டு தமக்கென வேறொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதை தாம் எதிர்ப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *