மாலைதீவு ஜனாதிபதிக்கு ஹக்கீம் அவசர கடிதம்

76

கொரோனாவால் உயிரிழந்த சடலங்களை சிறிலங்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர்,  சிறிலங்காவிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக்கிற்கு மின்னஞ்சலில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் அதனை அவர் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, மாலைதீவின் வெளிநாட்டு அமைச்சர் அப்துல்லாஹ் ஷஹீதிற்கும் அவர் அதனை மீள்பதிவேற்றம் செய்துள்ளார்.

கொரோனா காரணமாக உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வதற்கு மாலைதீவு முன்வந்திருப்பது தொடர்பான செய்தியை வாசித்த பின்னர், தங்களுக்கு இக்கடிதத்தை எழுதத் தோன்றியது.

சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனாவினால் இறப்பவர்களை எரிப்பது மட்டுமே என்ற அரசாங்கத்தின் ஒரே கொள்கையின் விளைவாக இந்நாட்டு முஸ்லிம் சமூகம் பாரதூரமான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த நிலையில் எமது சமூகத்தின் மீது தங்கள் நாட்டு அரசாங்கத்திற்குள்ள அனுதாப உணர்வு தாராள சிந்தையின் வெளிப்பாடாகும். அதனால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு ஜனாதிபதி சொஹ்லிக்கும் மாலைதீவு குடியரசு மக்களுக்கும் மனப்பூர்வமான நன்றியைக் கூறிக் கொள்கின்றோம்.

எவ்வாறாயினும் தொற்று நோயியல் விஞ்ஞான ஆதாரங்களையும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனெஸ்கோ நிறுவனம் ஆகியவற்றின் எவ்வாறு இறுதிக்கிரியை செய்யப்பட வேண்டுமென்ற வழிகாட்டுதல்களையும் புறக்கணித்துவிட்டு, நீதி நியாயமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்துகொள்வதை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி வருகின்றோம்.

அதைவிட எங்களது அரசியல் யாப்பில் உத்தரவாதமளிக்கப்பட்ட சமத்துவமான அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகவும் அது அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *