ரொரன்ரோவில் வாகனத்தால் மோதி 10 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

365

ரொரன்ரோவின் வட பகுதியில் வாகனத்தினால் மோதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரமான தாக்குதல் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த தாக்குதிலில் பத்து பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் படுகாயமடைந்த நிலையில், அந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் மீதான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பத்து முதல்தர கொலைக் குற்றச்சாட்டு மற்றும் 16 கொலை முயற்சிக் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள அலெக் மினாசியான் என்பவர் இன்று நீதிமன்றுக்கு கொண்டுவரப்படாத நிலையில், அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய வழக்கில் சந்தேக நபரை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெருமளவானோரிடம் வாக்குமூலங்களும், சாட்சியங்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், அவற்றை தொகுக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது வழக்கமான ஒரு விசாரணை அல்ல என்பதனால், பல்வேறு திணைக்களங்களும், பெருமளவு அதிகாரிகளும் இந்த விசாரணைகளில் தொடர்புபட்டுள்ளதுடன், பெருமளவு வெளிப்படுத்தல் அறிக்கைகள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இந்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவருவதில் காலதாமதங்கள் ஏற்படுவதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் நாள் இந்த வழக்கு மீண்டும் மன்றுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *