முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு

1593

யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் காலமான எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சாந்தனின் பூதவுடல், இன்று காலை 11மணிக்கு கரைச்சி பிரதேச சபை மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று தொடர்ந்து இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் மறைவு குறித்து முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.1

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

ஈழத்துப் பாடகர் சாந்தன் உடலளவில் எம்மை விட்டு நீங்கினாலும், அவர் தனது காந்தக் குரல் மூலம் எம்முடனே என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது இரங்கல் செய்தியில்குறிப்பிட்டுள்ளார்.அவரது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

“இந்த மண் எங்கள் சொந்த மண்…”, “கண்ணில் வடிக்கும் நீரை துடைத்தே வாருங்கள்…” என்று ஈழத்து இன விடுதலைப் போராட்டத்துக்கு இளைஞர்களை தனது காந்தக் குரலால் அழைத்து இன மீட்புக்காகப் பெரும் பங்களிப்புச்செய்த பாடகர் சாந்தன் எம்மை விட்டு விடைபெற்றுள்ளார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

இன விடுதலைப் போராட்டமொன்றில் போராடும் போராளிகளுக்கு மனவலிமை மிகவும் அவசியமானது. தனது பாடல்களால் எமது இளைஞர்கள் உள்ளிட்ட எமது இனத்திடையே இனவுணர்வையும் மனத்தைரியத்தையும் பெருக்கியவர் சாந்தன். இளைஞர்களையும் மக்களையும் போராட்டக் களத்துக்குக் கொண்டு வருவதில் கலை, இலக்கியங்களின் பங்கு மிக முக்கியமானது. கலைஞர்களின் பங்கும் அளப்பரியது. அந்தப் பங்கைச் செய்து முடித்த பின்புதான் சாந்தன் எம்மிடம் இருந்து ஓய்வு பெற்றிருக்கின்றார்.

எமது போராட்டம் கபடமாக மௌனிக்கப்பட்டதையே நினைத்து மிகவும் வேதனையோடு எம்மிடம் இருந்து விடைபெற்றுள்ள சாந்தன், உடலளவில் எம்மை விட்டு நீங்கினாலும் அவர் தனது குரல் மூலம் எம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் என தனது இரங்கல் அறிக்கையில் சரவணபவன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

செல்வராசா கஜேந்திரன்

விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பக்கபலமாகவிருந்தவர் எஸ்.ஜி.சாந்தன் எனப் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அந்தப் போராட்டத்தின் பின்னால் ஒட்டு மொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரட்டுகின்ற மிகப் பாரிய வரலாற்றுப் பணியை ஆற்றுவதற்குப் பாடகர்களுக்கு, கலைஞர்களுக்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது. அந்த வகையில் சாந்தன் அண்ணா தன்னுடைய இனிமையான குரல்களால் மக்களைக் கவர்ந்து மக்கள் மட்டத்தில் அந்தப் பாடல்களூடாக ஒரு தெளிவையும், பற்றையும் ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை இலட்சியத்தின் பின்னால் அணி திரட்டுகின்றதொரு புனிதமான கடமையை அவர் ஆற்றியிருக்கிறார்.

புரட்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தன் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பையும், வரவேற்பையும் பெற்ற ஒரு சிறந்ததொரு பாடகராக விளங்கினார். தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த வேளையில் தமிழ்த் தேசத்தின் உரிமைகள் தொடர்பாக எங்களை நாங்களே ஆளக் கூடிய தீர்வு தொடர்பாக, விடுதலை வேட்கை தொடர்பாக எமது மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பேரெழுச்சியை உருவாக்கத்திற்கு அவர் பாடிய பாடல்கள் மிகப் பெரும் பங்காற்றியுள்ளன.

அவ்வாறான புரட்சிகரமானதொரு பாடகர் யுத்தத்தின் பின்னர் ஒரு மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதுடன், இராணுவ உளவுத்துறையின் மோசமான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு உடல், உள ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டமையால் அந்த நோயிலிருந்து மீள முடியாத நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாக அவர் நோயுடன் கடுமையாகப் போராடிய நிலையில் அவரது உயிர் எமது மண்ணை விட்டுப் பிரிந்திருக்கிறது. அவரது இழப்பு எங்களுடைய மண்ணுக்கும், கலையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவருக்கு நிகர் அவரே என்று சொல்லப்படும் வகையில் சிறந்த பாடகராகச் சாந்தன் அண்ணா விளங்கினார்.

அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகிய அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

அங்கஜன் இராமநாதன்

ஈழத்தின் தலைசிறந்த உணர்ச்சிப் பாடகர் எழுச்சி பாடகர் குணரத்தினம் சாந்தன் குணமாகி மீண்டும் எம்மோடு இணைவார் என நாம் எதிர்பார்த்து காத்திருந்தோம், ஆனால் அது பொய்த்து போய் விட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.பாடகர் சாந்தனின் மரணம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீண்டு வருவார் என எதிர்ப்பார்த்து காத்திருந்தோம். அவர் இறந்து விட்டார் என்ற செய்தியும் வதந்தியாக இருக்கக் கூடாதா என உள் மனம் சொன்னாலும் இயற்கையில் அது உண்மையாகிவிட்டது. கடந்த காலங்களில் எனது அரசியல் பயணத்தில் தம்பி என நெருங்கி நன்மை தீமைகளை சொல்லித்தரும் அண்ணனாக எனது பிரச்சார நடவடிக்கையின் போது ஒரு மிகச்சிறந்த ஆலோசகராகவும் என்னோடும் இணைந்திருந்தவர். மனது விட்டு மானசீகமாக பேசுவதில் நேர்மையானவர். அவரது பாடல்கள் தமிழ் என்ற ஒன்றும் தமிழன் என்ற ஒன்றும் இவ்வையகத்தில் இருக்கும் வரை நிலை பெற்றிருக்கும்.

எப்போது அழைத்தாலும் பதிலளிக்கும் அந்த பண்பாளனை இன்று ஈழம் இழந்திருப்பதுடன் மீளா துயரத்தில் எம்மை ஆழ்த்தியிருக்கிறது. அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரிற்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எனது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன் அண்ணனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *