கனடியத் தமிழர் பேரவையின் 8வது ஆண்டு நிதிசேர் நடை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஸ்காபரோ தொம்சன் மெமோரியல் பார்க்கில் (Thomson Memorial Park) இந்த நிகழ்வு காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை என அழைக்கப்படவிருக்கும் நல்லின மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை, மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தில் உருவாக்க இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளுமாறு கனடியத்
தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
கொடிய போரின் இன்னல்களைத் தாண்டியபின், வாழ வழி கிட்டுமா என்று நொந்துபோய் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள், போரினால் அங்கங்களை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், விதவைகள் என ஏராளமானோருக்கு ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணைத் திட்டம் ஒரு ஆறுதலாக இருக்கும்.
இந்த நிதிசேர் நடையில் கலந்து கொள்ளவும், கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை குறித்த விபரங்களைத் தரவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் கனடா சென்றுள்ளார்.
கனடியத் தமிழர் பேரவையுடன் இணைந்து அவர் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணைத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தன்னாலான முழுப் பங்களிப்பையும் வழங்குகிறார்.
புலம்பெயர் சமூகத்தின் உதவிகள் சீரிய திட்டமிடலுடன் ஒருமுகப்படுத்தப்பட்டு செய்யப்படும்போது பலன்கள் பெரிதாக இருக்கும்.
அவ்வகையில் கனடா தமிழர் பேரவையின் ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை தொலைநோக்குடன் நீண்ட கால பலன்தரும் வகையில் அமைகிறது.
இத்திட்டத்தின் வழி நமது வறிய மக்கள் பலன்பெறும்போது அவர்கள் நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் அப்பிரதேசங்களில் வாழக்கூடிய சந்தர்ப்பமும் உருவாகிறது.
இவ்வாறாக அவர்கள் அப்பிரதேசங்களில் குறிப்பாக எல்லைப் பிரதேசங்க ளில் வாழ்வார்களேயானால் எம் நிலங்கள் பறிபோகும் அவலம் நேராது.
இதன்மூலம் எமது நிலங்களை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
கனடிய தமிழர் பேரவை இந்த முயற்சி வெற்றி பெறும் வகையில் உங்கள் வரவையும் அங்கு எதிர்பார்க்கிறது.
கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணைத் திட்டம் குறித்து மேலதிகமாக உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் அவர்களிடம் பேசித் தெரிந்து கொள்ளவும் உங்கள் வரவு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் 11ஆம் திகதி கனடியத் தமிழர் நிதி சேர் நடையில் உங்களையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்திட்டத்தில் பங்காளராகி நம் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மக்களின் அவலங்களைப் போக்குபவர்களாகவும் மாறிவிடுவோம்.