தமிழகத்துக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமானது என கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு தொடர்பில் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் நடாத்திய ஆலோசனை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில் எதிர்வரும் 30ஆம் நாள் வரையில் நாள்தோறும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு காவிரி மேற்பார்வை குழு உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, எதிர்வரும் 27ஆம் நாள்வரை 6 ஆயிரம் கன அடி நீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் வழக்கறிஞர், நீர்வளத்துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் எடுத்துக்கூறிய போதிலும் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டிருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் ஆராய இருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலைமையில் கர்நாடக மக்களும், கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்றும், நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மக்களின் நலனை காப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும், எனவே கர்நாடக அரசுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்றும் முதல்வர் சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளார்.