காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் சட்ட விதிமீறல் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சட்ட விதிப்படி உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு நிர்வாகம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதன்படி உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கமே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றாவிட்டால் நாட்டில் அது மிகவும் மோசமான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் அவமதிக்கும் நோக்கம் தமது அரசுக்கு இல்லை என குறிப்பிட்டு கர்நாடக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில், காவிரி படுகையில் இருக்கும் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் இந்த தீர்மானத்தை நாளை 26ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்க உள்ளதாகவும், 20ஆம் நாள் தண்ணீர் திறக்குமாறு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்குமாறும் கோர இருப்பதாகவும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள அந்த கடித்தில் கர்நாடக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
பரதீய ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் என்பவரே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்ற தீர்மானத்தை கர்நாடக சட்டசபையில் முன்வைத்திருந்தார் என்பதுடன், மத்தியில் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கமும் பாரதீய ஜனதாக கட்சி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.