தமிழ் மக்கள் தமது உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காக உண்ணா நோன்பு போராட்டத்தை நடாத்தி தன் இன்னுயிரை நீத்த யாழ் பிராந்திய முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் 29ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று தாயகம் உட்பட தமிழர் வாழும் பகுதி எங்கும் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழீழ போராட்ட வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாத, ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களது வீரச்சாவின் 29ஆவது ஆண்டினை உலகத் தமிழினம் இன்றும் விடியாத சுதந்திர வேட்கையுடனும், எட்டப்படாத இலட்சிய பற்றுறுதியுடனும் நினைவு கூர்கின்றது.
அகிம்சை வழியாக விடுதலையை பெற்றுக் கொடுத்ததாக காந்தியை கொண்டாடும் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்குமே அகிம்சை என்பது என்ன என்பதை நிரூபித்துக் காட்டிய திலீபனை, தாயம் உட்பட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள் இன்று நினைவுகூர்கின்றனர்.
1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஊரெழுவில் பார்த்திபன் இராசையா என்ற இயற்பெயருடன் பிறந்த திலீபன், 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
எமது திலீபனின் அகிம்சைக்கும் காந்தி தேசம் இரங்காத நிலையில், 12 நாட்கள் நீராகாரம் கூட இன்றி உண்ணாவிரதமிருந்த திலீபன், ஈழ மக்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 அன்று காலை 10.48 மணிக்கு வீரச்சாவடைந்தார்.
தியாக தீபம் திலீபனின் இந்த சாவு, தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய, பாரத நாட்டை தலைகுனிய வைத்த, உலகத்தின் மனசாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்பவையே அன்று திலீபன் அவர்கள் முன்வைத்த கொரிக்கைகளாகும்
திலீபன் அவர்கள் அன்று முன்வைத்த கோரிக்கைகளும் அவரது இலட்சியமும் இன்றுவரை எம்முன் விரிந்து கிடக்கும் நிலையில், அவரை நினைவுகூர்வதுடன், அவரது கனவுக்கேற்ப இலட்சியத்திற்காய் ஒன்றுபட்டு பயணிக்க உலகத் தமிழினம் உறுதிபூண்டுள்ளது.
எம்மைப் போன்று எதிர்கால சந்ததியும் துன்பியல் வாழ்க்கைக்குள் சென்றுவிடக் கூடாதென்பதற்காகவும், எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை என்பதற்காகவும் மக்கள் கிளர்ந்தெழ வேண்டுமென தான் உயிர்துறக்கும் தருவாயில் இறுதி உரையில் கூறயிருந்தார் திலீபன்.
அதற்கு பின்னர் மக்கள் போராட்டம் வீறுகொண்டு எழ, தியாகி திலீபனின் உயிர்த்தியாகமும் காரணமாக அமைந்தது என்பதுடன், என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்றுவரை திலீபனின் கனவை நனவாக்க தமிழ் மக்கள் போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்.