காவிரியில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை தினமும் 6 ஆயிரம் கனஅடி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தீர்ப்பை செயல்படுத்த இயலாது என கூறி, இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானத்தையும் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேலும், தமிழகத்திற்கு மீதம் தரவேண்டிய 42 டிஎம்சி நீரை வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் கொடுப்பதாக தெரிவித்த கர்நாடக அரசு, காவிரி நீர் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரியது.
இந்நிலையில், கர்நாடக அரசின் மனுவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடும் வரை, அம்மாநிலத்தின் எந்த கோரிக்கையையும் பரிசீலிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று மதியம் 2 மணியளவில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது 20ம் தேதி தாங்கள் பிறப்பித்த உத்தரவின் நிலை என்னபது பற்றி கர்நாடக அரசிடம், நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்புவார்கள் என தெரிகிறது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் கதி என்னவாகும், அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யுமா அல்லது கருணை அடிப்படையில் பரிசீலிக்குமா என்று பல கேள்விகள் சட்ட வல்லுநர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எனவே இன்று வழங்கப்போகும் உத்தரவை இரு மாநில விவசாயிகளும் பரபரப்புடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.