சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அரசியலமைப்பு திருத்தத்துக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நேற்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த போது, மக்கள் கருத்தறியும் குழுவின் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது அந்தப் பரிந்துரைகளில், அரசியலமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளது என்றும், இனிமேலும் அதில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதான, சாதாரணமான அரசியல் அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை கொண்டிருந்ததாகவும், அரசியலமைப்பு மக்களுக்கானது என்பதனால், அவர்களின் கருத்துக்கள் முக்கியமானது என்றும் அந்த பரிந்துரைகளில் விபரித்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அரசியலமைப்பு மிகச் சாதாரணமானது என்றும், இலகுவாக விளக்கிக் கொள்ளக் கூடியது என்பதையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமஸ்டித் தீர்வில் மக்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்பதையும், ஆனால் மாகாணசபை முறை மாற்றப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர் என்பதையும் தமது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் மக்கள் கருத்தறியும் குழுவின் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.