உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் முதல் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கட்சியில் அகிலேஷ் யாதவ் ஒரு தரப்பாகவும், முலாயம் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சியில் உட்பூசல் நாளுக்கு, நாள் வளர்ந்து வருகிறது.
உட்கட்சிப் பூசலை முடிவுக்கு கொண்டுவர லக்னோவில் முலாயம் சிங் யாதவ் தலைமையில் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பேசிய ஷிவ்பால் யாதவ், புதிய கட்சியை தொடங்கி சில கட்சிகளின் துணையோடு தேர்தலை சந்திக்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக கூறினார். இதனை மறுத்த அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் கூறினால் உடனே பதவி விலக தயார் என கண்ணீருடன் கூறினார். அப்போது அகிலேஷிடமிருந்து ஷிவ்பால் யாதவ் மைக்கை பிடிங்கியதால் அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர்.
கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், அதிகார போதை அகிலேஷ் யாதவின் தலைக்கு ஏறிவிட்டது. தமது கட்டளைக்கு கட்டுப்பட்டே அனைவரும் செயல்பட முடியும் என்றார். சிறைக்கு செல்வதில் இருந்து தம்மை காப்பாற்றிய அமர்சிங்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்க இயலாது. அதேபோல கட்சிக்காக வியர்வையும், ரத்தமும் சிந்தி பாடுபட்ட ஷிவ்பாலின் தியாகத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றார். அப்போது அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். முலாயம் சிங் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் சமசர கூட்டம் பாதியில் முடிவடைந்தது. முலாயம் சிங் யாதவ் முன்னிலையில் அகிலேஷ் – ஷிவ்பால் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் கட்சியில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.