நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தனது கொள்கையில் துளியளவும் பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முப்படையினருக்கு தேவையான வளங்களை குறையின்றி வழங்கி அவர்களைப் பலப்படுத்துவதுடன், போர்க்களத்தில் போரிட்ட படையினரின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காக எப்போதும் பாடுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்நாட்டின் முன்நோக்கிய பயணம் தொடர்பாக புரிந்துணர்வற்ற, நாட்டின் தேசிய பாதுகாப்பை குறைத்து மதிப்பிட்டுவோரின் சந்தர்ப்பவாத செயற்பாடுகளால், நாட்டின் சனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சரென்ற வகையிலும் தன்னிடம் பின்னடைவை ஏற்படுத்த முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கேற்றவாறு நாட்டின் தேசிய பாதுகாப்பை இயக்குவதற்கு தயாரில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
போரில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் கருத்தியல் ரீதியாக தோற்கடிக்கப்படாத, நாட்டுக்கு வெளியிலிருந்து ஒருபோதும் அடைய முடியாதவற்றை கனவு கண்டுகொண்டிருப்பவர்களை, அனைத்துலக ரீதியில் தோற்கடிப்பதற்கு மிகவும் நட்புறவுடனான அனைத்துலக கொள்கையுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறப்புத் தேவையுடைய அனைத்து படைவீரர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.