ரொரன்ரோ துறைமுகத்தினுள் நேற்று வீழ்ந்து மூழ்கிய காரை தேடி மீட்கும் நடவடிக்கைள் இன்று காலையில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
நேற்று பிற்பகல் நான்கு மணியளவில் Cherry Streetஇல் வேகமாக சென்ற கார் ஒன்று, தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு ஒன்ராறியோ ஆற்றினுள் வீழ்ந்துள்ளது.
வீதியின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் சென்ற கார், Polson Streetஇன் தெற்கே அமைந்துள்ள, இடதுபக்க பாலத்தின் தடுப்புச் சுவர்களை மோதியே நீரினுள் வீழ்ந்து மூழ்கியதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துறைமுகப் பகுதிக்கு காவல்த்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில், குறித்த அந்த காரினுள் இருந்த பெண் சாரதியை காப்பாற்றும் முயற்சியாக நீரினுள் குதித்த ஒருவர் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கார் நீரினுள் சுமார் 25 – 30 அடி ஆழத்தினுள் மூழ்கியிருக்கக்கூடும் என்ற நிலையில், அந்த காரை செலுத்திச் சென்ற பெண்ணை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
குறித்த அந்த துறைமுகப்பகுதியில் வெளிச்சம் குறைவடைந்தமையாலும், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும் மீட்பு நடவடிக்கைகளை இன்று காலை வரையில் நிறுத்தி வைப்பதாக, நேற்று மாலை 6.30 அளவில் அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இதேவேளை குறித்த அந்த கார் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்குள் ஒருவர் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகின்ற போதிலும், அவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை எனவும் காவல்த்துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.