கனேடிய மத்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் மீது பெப்பர் ஸ்பிறே எனப்படும் மிளகுத் தெளிப்பான்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிறை அதிகாரிகள் இவ்வாறான நச்சுத்தன்மை வாய்ந்த தெளிப்பானை அடிக்கடி பயன்படுத்தி வருவதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் கனேடிய சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் சிறைச்சாலை அதிகாரிகள் பலத்தினை பிரயோகித்த 60 சதவீதமான சம்பவங்களில், இவ்வாறான மிளகுத் தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, குறித்த அந்த கண்காணிப்பு அமைப்பின் அதிகாரி நேற்று வெளியிட்டுள்ள தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஆயிரம் தடவைகளுக்கும் அதிகமாக இந்த தெளிப்பான்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஆண்டுகளின் முன்னர் உள்ள நிலவரத்தின்படி இது மூன்று மடங்கு அதிகம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இதன் மூலம் கனடாவின் சிறைச்சாலைகளில் அபாயகரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது என்று அர்த்தம் கொள்ள முடியாது என்ற போதிலும், 2010ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான மிளகுத் தெளிப்பான்களை பயன்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொதுவான நடவடிக்கையாக மாறி வருவதாவும் அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறான தெளிப்பான் கருவிகளை பயன்படுத்துவது இலகுவான விடயமாக காணப்படுகின்றமையால், சிறைக்கைதிகளுடன் உரையாடி நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது உள்ளிட்ட ஏனைய பொதுவான கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தும் போக்கு குறைவடைந்து வருவதாகவும அவர் கவலை வெளியிட்டுள்ளார்.