போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்காது எனவும், அனைத்துலக பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனேலாவிடம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பொது நலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலே, நேற்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்து, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் இறுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளமை எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனிலேவிற்கு தெளிவுபடுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
சமாதானம், நல்லுறவு குறித்து என்ன நடைபெறுக்கின்றது என்பது குறித்தும், ஜெனீவாவில் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. செயலாளருடைய அறிக்கை சம்பந்தமாகவும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தொடர்பில் அறிவதற்காகவுமே பிரித்தானிய பிரதிநிதி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெனீவா தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுக்கும் போதே பல கடிதங்களை ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர், செப்டெம்பர் மாதங்களில் எழுதியிருந்ததாகவும், அவற்றில் பல நடைமுறையில் நடந்தவற்றை எடுத்துக்காட்டிதாகவும், அனைத்துலக ஈடுபாட்டுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெறாது விட்டால் நீதியைப் பெறமுடியாது விடும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுதுகூட சட்டத்தரணிகள், நீதிபதிகள் உட்பட, எந்தவிதத்திலும் வெளிநாட்டு உள்ளீடுகளை அரசாங்கம் கொண்டு வருவதாக இல்லை எனவும், வெளிநாட்டு உள்ளீடுகள் வராது இருந்தால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிச்சயம் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், போர்க்குற்ற சட்டமானது இலங்கையின் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை பிரத்தானிய பிரதிநிதியிடம் வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்டிய நிலையில், என்னவாக இருந்தாலும் சமாதானத்தை நோக்கிச் செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கருத்தை அவர் தமக்கு தெரிவித்ததாகவும் முதலமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு முன்வந்தால்கூட பல விதங்களில் எங்களை அடிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தெற்கில் இருந்து எடுக்கப்படுவதாகவும், எங்களுடைய தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக நடவடிக்கைகள் இருப்பதையும் தாங்கள் பிரித்தானிய பிரத்திநித்க்கு சுட்டிக்காட்டிய நிலையில், அரசாங்கத்துடன் பல விடயங்களை பேசுவதாக அவர் தமக்கு உறுதியளித்துள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.