அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் மீது தமக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும், டிரம்புடன் நம்பிக்கை தரும் உறவினை தன்னால் நிறுவ முடியும் என்றும் யப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
அதிபராக தேர்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை நேற்று சந்தித்து பேச்சு நடாத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நியூயார்க்கில் இடம்பெற்ற அந்த 90 நிமிட சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த சந்திப்பிற்கு பின்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
எனினும் விவகாரங்களை ஆழமாக ஆராயும் நோக்கில் இன்னொரு நாளில் மீண்டும் சந்திப்பு நடாத்த இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதிய அதிபராக தேர்வான டொனால்ட் டிரம்ப் தமது அரசாங்கத்தில் இடம்பெறும் பதவிகளை நிறப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒய்வு பெற்ற இராணுவத் தளபதியான மைக்கேல் ஃபிளின் என்பவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் மைக்கேல் ஃபிளின், அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரான மிட் ரோம்னியையும் புதிய அதிபராக தேர்வான டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார் என்றும், வெளியுறவு அமைச்சர் பதவியைத் ஏற்றுக்கொள்ளும்படி மிட் ரோம்னியிடம் கோருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.