நோவா ஸ்கொட்ஷியா மாநிலத்தில் ஆசிரியர்கள் அனைவரும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகி வருவதனால், நாளை திங்கட்கிழமை அங்கு பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது பணி தொடர்பிலான ஒப்பந்தப் பேச்சுக்களில் இணக்கப்பாடு எட்டப்படாததை அடுத்தே இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் அனைவரும் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது என்ற காரணத்தினாலேயே பாடசாலைகளை மூடும் முடிவினை தாம் மேற்கொண்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போராட்டங்கள் அனைத்தையும் விட மாணவர்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் விபரித்துள்ளார்.
இது ஒரு குறுகிய கால அசெளகரியமாகவே இருக்கும் என்பதனை தாம் பெற்றோருக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போராட்டங்கள் மாணவர்களை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்குள் தள்ளிவிடக் கூடும் எனவும், பாடசாலை வளாகத்தினுள் மாணவர்கள் தனித்து விடப்படும் சூழ்நிலைகள் உருவாகக்கூடும் என்றும், வகுப்புகளில் கவனிப்பாரற்று விடப்படும் மாணவர்களும், சிறப்புத் தேவையுடைய மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதி்ர்நோக்கக் கூடும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.