சிரியாவின் அலெப்போ நகரில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அலெப்போ நகரிலிருந்து குடியிருப்பாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை சிரியா அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், வெளியேற்ற நடவடிக்கையை உடனடியாக மீண்டும் தொடங்கவேண்டுமென உலக நாடுகள் பலவும் கோரிக்கை விடுத்துள்ளன.
கடைசியாக உள்ள நிலவரப்படி, குடியிருப்பாளர்களின் வெளியேற்றத்தை அனுமதிக்கும் புதிய உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அது தொடர்பில் அறிவிப்புக்கள் எவையும் வெளியாகவில்லை.
அதேவேளை அலெப்போ மக்களை வெளிறேற்றும் நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் வெளியிட்டு வரும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெளியேற்ற நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அது இன்னமும் முடிவடைந்துவிடவில்லை என்று சிரியாவின் இராணுவத் தரப்பு கூறியுள்ள அதேவேளை, அலெப்போவில் இருந்து பெண்களும் குழந்தைகளும் வெளியேற்றப்பட்டு விட்டதால் அந்த நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஆனால் உடன்பாட்டைக் கிளர்ச்சித் தரப்பினர் மீறிவிட்டமையால் வெளியேற்ற நடவடிக்கையை இடைநிறுதியதாக சிரிய அரசாங்கம் தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களோடு சேர்ந்து வெளியேறும் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களைக் கடத்த முயல்வதாக அரசாங்கத் தொலைக்காட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதேவேளை ஈரான் மற்றும் அதன் ஷியா (Shia) படையினரே கிழக்கு அலெப்போவில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் வெளியேற்றத்தை நிறுதித்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சிரிய போராளிகளின் மூத்த தலைவர்கள், ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை நிறைவேற்றும் தனது கடப்பாட்டை ரஷ்யா நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் உடன்பாட்டை அனைத்துத் தரப்புகளும் மதித்து நடக்க வேண்டுமெனத் துருக்கியும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் “அலெப்போவும் நரகமும் வெவ்வேறு அல்ல” என்ற நிலை உருவாகி வருவதாகக் ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.