வாடிகன் நகரில் உள்ள செயின்பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. சர்வதேச நாடுகள் தலையிட்டு பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் ஒன்றினைந்து புதிய வரலாறு எழுத வேண்டும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கையகப்படுத்திய பகுதியில் குடியிருப்புகள் அமைத்து இருப்பதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க வேண்டும்.
உலக அளவில் பல நாடுகள் மற்றும் நகரங்களில் தீவிரவாதம் தலையெடுத்துள்ளது. அங்கு வாழும் மக்கள் மனதில் அச்சமும், மரண பயமும் விதைக்கப்பட்டுள்ளது. அது கண்டிக்கத்தக்கது என்றார்.
ஜெர்மன் தலைநகர் பெர்லினில் லாரி ஏற்றி பலர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து வாடிகனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரோம் நகருக்குள் வேன்கள், லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. வாடிகனை சுற்றி ராணுவ ஜீப்புகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன.