மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் அரசியல் கூட்டணி குறித்தும், கட்சியின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனான தோழமை தொடரும் என்றும் வைக்கோ தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியில், வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அங்கம் வகித்தன.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்து விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்தித்து அதில் படுதோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.