தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் சனவரி மாதம் ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவரின் காரியாலயத்தில் மாலை 4.30 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாதமொருமுறை நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாறான நடைமுறை பின்னபற்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே எதிர்வரும் சனவரி மாதம் 8ஆம் நாள் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெறுவதற்கு முன்னதாக, 6ஆம் நாள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.





