கனேடிய அமைச்சரவைவில் சில புதிய மாற்றங்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று மேற்கொண்டுள்ள நிலையில், கனடாவின் புதிய வெளி விவகார அமைச்சராக கிறிஸ்டியா ஃபிறீலான்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப பதவியேற்கவுள்ள நிலையில், அமெரிக்காவுடன் சிறந்த தொடர்புகளைக் கொண்டுள்ளவரும், முன்னாள் பொருளாதார ஊடகவியலாளருமான கிறிஸ்டியா ஃபிறீலான்ட் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, கனடாவின் உள்ளூர் மற்றும் அனைத்துலக ரீதியிலான முன்னெடுப்புக்களில் எதிர்பார்க்கப்படாத சில மாற்றங்கள் முனைப்புக் காட்டும் நிலையில், பிரதமரின் இந்த புதிய அமைச்சரவை மாற்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புதிய நிர்வாக மாற்றமானது கனடாவுக்கு வாய்ப்புக்களையும் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன், அனைத்துலக விவகாரங்களிலும் மாற்றங்களை உண்டுபண்ணியுள்ளதாக, இந்த அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடியர்களுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், சிறந்த செயற்ல்திறனைக் கொண்ட குழுவினை முன்னகர்த்திச் செல்ல வேண்டியது தமது கடமை எனவும், அதனையே அனைத்து கனேடியர்களும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அமெரிக்காவுடனான உறவுகள், சீனாவுடனான உறவுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் என்று பல்வேறு விடயங்களிலும் தாம் மிகவும் தீர்க்கமாக செயற்பட வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய திறன் தமது அரசாங்கத்துக்கு உள்ளதான நம்பிக்கையையும் பிரதமர் வெளியிட்டுள்ள போதிலும், கனடாவின் கொள்கைகளும் நலன்களுமே தமக்கு முக்கியமானது எனவும், அதனையே தாம் தொடர்ந்து பின்பற்றுவோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.