ரொரன்ரோவில் வீதி விபத்துக்களும், பாதசாரிகள் வாகனங்களால் மோதப்படும் சம்பவங்களும் அதிகாரித்துவரும் நிலையில், 2017ஆம் ஆண்டில் அதனை குறைக்கும் வகையில் இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ள ரொரன்ரோ நகரபிதா, ரொரன்ரோவில் வீதிப் பாதுகாப்புக்காக மொத்தம் 45 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், வீதிப் பாதுகாப்பு நடவடிக்கையாக 80 மில்லியன் டொலர்கள் செலவில் ஐந்து ஆண்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இந்த புதிய திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் ரொரன்ரோவின் முக்கியமான 12 வீதிச் சந்திப்பு பகுதிகளில் முதியவர்களுக்கான பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அந்த பகுதி ஊடாக முதியவர்கள் கடந்து செல்வதற்கு போதிய நேர அவகாசம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அது தவிர ரொரன்ரோவில வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், 76 சிவப்பு விளக்கு சமிக்கைப் பகுதிகளில் ஒளிப்பதிவு சாதனங்கள் பொருத்தப்படவுள்ளதாகவும், 12 இடங்களில் வாகனங்களின் வேகத்தினை காட்டும் கருவிகள் பொருத்தப்படவுள்ளதாகவும், ரொரன்ரோவின் சுமா 50 வீதிச் சந்திப்புகளில் பாதசாரிகள் கடந்து செல்லும் நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு முதியவர்களும் ஏனையோரும் வீதிகளில் பலியாவது தடுக்கப்படக்கூடிய விடயம் என்ற வகையில், அரசாங்கமும் தாமதமின்றி விரைவாகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளை மக்கள் விரைவிலேயே காண முடியும் எனவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் ரொரன்ரோ நகர வீதிகளில 43 பாதசாரிகள் வாகனங்களால் மோதுண்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.