அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதையடுத்து, தற்போது அதிபராக உள்ள ஒபாமா வரும்-20 ஆம் தேதி விலகுகிறார்.
இந்த நிலையில் சிகாகோவில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் ஒபாமா உரை ஆற்றினார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஒபாமா பலத்த கரகோஷத்திற்கு இடையே உரையாற்றியதாவது:- “ ஆட்சி மாற்றத்தின் போது நிர்வாக ரீதியாக எந்த சிக்கலும் இருக்காது. இன்னும் 10 நாட்கள் நாட்டின் அடையாளமாகவும் சாட்சியாகவும் ஜனநாயகம் இருக்கும். ஒற்றுமையின் அடிப்படையில்தான் ஜனநாயகம் வளர்கிறது.
8 ஆண்டுகளில் எந்த பயங்கரவாத தாக்குதலும் அமெரிக்காவில் நடைபெறவில்லை. பிரிவினையை தூண்டுவதே இனவாதமாக உள்ளது. தவறான நபர்களை தேர்வு செய்துவிட்டு வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. இஸ்லாமியத்திற்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்க முடியாது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் முற்றிலும் அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது பதவியேற்ற போது இருந்ததை விட அமெரிக்கா சிறந்ததாகவும் வலிமையான வும் உள்ளது” என்றார்.