தமிழர் பண்பாட்டை மட்டும் சிதைக்கத் துடிப்பது ஏன் என்று இயக்குணர் பாரதீராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் காளையடக்கும் போட்டிகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக போராட்டம் நடாத்திய மக்கள் மீது காவல்த்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
பிற மாநிலங்களுக்கு எந்த நியாயங்கள் பின்பற்றப் படுகின்றனவோ அந்த நியாயங்கள் தமிழ் மக்களுக்கும் வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், இந்த மண்ணின் மைந்தர்களே அதனை ஆள வேண்டும் என்று விரும்புவது தவறானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டின் சட்டதிட்டங்களுக்கும், சனநாயகத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதற்கே தாங்கள் விரும்புகின்ற போதிலும், தங்கள் கைகளுக்கு விலங்குமாட்டி தங்கள் கண்களுக்கு கருப்புத் துணிபோட்டு அடிமையாக்க விரும்புவது நாகரீகமானதா என்றும் அவர் வினவியுள்ளார்.
மன்னராட்சி காலமாயினும், மக்களாட்சி காலமாகினும் மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பேணி பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காளையடக்குவதை மிருகவதை என்று சொல்லி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வியலான கலாச்சாரத்தின் பண்பாட்டின் அடையாளச் சின்னம் மீது போர்த்தொடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாலமேடு, சிங்கம்புணரி போன்ற தமிழகத்தின் சில பாகங்களில் இன்றும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாலமேட்டில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்கள் காளைகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டமையால் பரபரப்பு ஏற்பட்டதாகவும், இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மேலும் சில இடங்களில் இன்று காவல்த்துறையினருக்கு தெரியாத வகையில் காளையடக்கும் போட்டிகளும் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.