அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது ஆய்வு ஆராய்ச்சிப் பணிகளில் மோசமான உடனடி மற்றும நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவகங்கள் தெரிவித்துள்ளன.
ஆய்வுப் பங்காளித்துவம், அனைத்துலக மாணவர்களின் ஆய்வுப் பணிகள், கல்வியியல் ஆய்வரங்குகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள், வெளிக்களப் பயணங்கள் மற்றும் ஆய்வாளர்களின் குடும்ப உறவுகள் ஆகியவற்றில் அமெரிக்காவின் இந்த தடை உத்தரவானது ஏற்கனவே பாரிய பாதிப்பினை ஏற்படுத்தி விட்டதாக கனடாவின் 97 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துப்படுத்தும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை இந்த தடை உத்தரவானது முடிந்தவரையில் விரைவாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த அறிவியல் வல்லுணர்களை ஈர்ப்பதில் அமெரிக்கா முன்னணியில் திகழ்ந்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம் என்ற போதிலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அண்மைய நடவடிக்கையானது அதில் பாரிய பாதிப்பி்னை ஏற்படுத்தப் போவதாக அமெரிக்க அறிஞர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் இந்த தடை உத்தரவு காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள, பாதிக்கப்பட்ட நாடுகளின் சுமார் 80 பல்லைக்கழக பணியாளர்கள் மற்றும் சுமார் 350 மாணவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.