அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு தொடர்பான புதிய சட்டமூலம் அந்த நாட்டு நாடாளுமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த சட்ட மூலம் இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய சட்டமூலத்தின் பிரகாரம் எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 1,30,000 டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடைமுறை வெளிநாட்டு ஊழியர்களை குறிப்பாக இந்திய ஊழியர்களை பணியமர்த்துவதில் நிறுவனங்களுக்கு கடினமாக அமையும் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் எச்1பி விசா நடைமுறையில், இதுவரை வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60 ஆயிரம் டொலர்களாக இருந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம அமெரிக்காவில் சில முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைக்காகவும், செலவை குறைக்கும் வகையிலும் அமெரிக்க ஊழியர்களை பணியமர்த்தாது, எச்1பி விசா நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியிருந்தன.
ஆனால் தற்போது அந்த குறைந்தபட்ச ஊதியத்தை இரட்டிப்பாக்கியுள்ளமையால் அமெரிக்கர்களே அந்த வேலைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்பு ஏற்படும் என்றும், அதனால் குறைந்த சம்பளத்திற்காக பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட பிறநாட்டு ஊழியர்கள் அந்த வாய்புக்களை இழக்க வேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்1பி விசாவோடு ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் பணிபுரிய செல்வோரில் 80 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர்கள் என்பதுடன், அதில் பலரும் தகவல் தொழில்நுட்ப தொழில்துறையில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.