கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனையை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது நம்பிக்கை வரவேண்டும் என்றால் அதற்கு முன்னுதாரணமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் வவுனியாவில் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அங்கு விஜயம் செய்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் கொழும்புக்கு விஜயம் செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பகல் அலரி மாளிகையில் வைத்து சந்தித்தனர். இந்த சந்திப்பில் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தவும், அதனை தொடர்ந்து முன்னெடுக்கவும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் சிறப்பு பொலிஸ் குழுவொன்றை அமைக்கும் யோசனை அரசாங்கத்திடம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரிடம் முன்பாகவே நிராகரித்துள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் யோசனை மீது நம்பிக்கை வரவேண்டும் என்றால் அதற்கு முன்னுதாரணமாக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுவித்துக்காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதன்போது குறுக்கீடு செய்த இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம்கூட தனக்கு இல்லை என்று உறவினர்களின் கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்து விட்டதாக சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார்.
அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறான தீர்மானத்தில் இருந்தால் போராட்டங்களை தாங்களும் தொடர்வோம் என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் பிரதமருடனான சந்திப்பு மற்றும் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை கொழும்பில் இன்றைய தினம் மாலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.