அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புகளும், சுற்றுக்காவல் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று இரவும் அமெரிக்காவினுள் இருந்து கனடாவுக்குள் நுளைந்துள்ளனர்.
குறி்த்த அந்த நான்கு பேரும் கியூபெக்கின் வேர்மொண்ட் எல்லைப் பகுதி ஊடாக கனடாவுக்குள் நுளைந்துள்ளதனை மத்திய காவல்த்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் நுளையும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ள நிலையில், குறித்த அந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு இவ்வாறு நான்குபேர் கைது செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு நாளும் இவ்வாறு எல்லையினைக் கடந்து வருபவர்களை தாம் சந்திக்க நேர்வதாகவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், அது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
எனினும் இவ்வாறு எல்லைதாண்டி வருவோரில் பலரும் அகதி தஞ்சக் கோரிக்கையினையே முன்வைத்துவரும் நிலையில், அவர்களை அருகில் உள்ள எல்லைச் சாவடிகளுக்கு, மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைத்து வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த சனவரி மாதத்தில் மட்டும் கியூபெக்கில் இவ்வாறு அரசியல் தஞ்சம் கோரியோரின் எண்ணிக்கை 452 என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கியூபெக் மாகாணத்திலேயே இவ்வாறு அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுளைவோரின் எண்ணிக்கை வேகமான அதிகரிப்பினை கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.