சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் இடையே இன்று காலையில் தொலைபேசி வாயிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது குறித்த தகவலை இன்று வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, சிரியாவில் இடம்பெற்ற இரசாயன தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக அமெரிக்க மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து முன்னதாக அமெரிக்காவினால் தெரிவி்க்கப்பட்ட விடயங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக நேற்று அமெரிக்காவால் சிரியா மீது ஏவுகணைத் தாககுதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே, அது தொடர்பில் அமெரிக்காவால் தமக்கு விபரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆயுததத் தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தே காரணம் என்பதனை வியாழக்கிமை இரவு அமெரிக்கா தமக்கு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவால் சிரிய முகாம் ஒன்றின் மீது இந்த எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மட்ஸ் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜானைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாகவும், பின்னர் அமைச்சர் சஜான் மூலம் தான் இந்த விடயத்தினை அறிந்து கொண்டதாகவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தகவல் வெளியிட்டுள்ளார்.
அதனை அடுத்து இன்று காலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தான் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், சிரிய அரசாங்கத்தின் இவ்வாறான இரசாயனத் தாக்குதல்கள் தொடரக்கூடாது என்பதனை தாமும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோரமான போர்க் குற்றங்கள் இடம்பெறும் போது, அனைத்து நாகரிகமடைந்த மக்களும் ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் பிரதம்ர் ஜஸ்டின் ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிரிய விவகாரத்திற்கு அரசியல் ரீதியான தீர்வினை ஏற்படுத்துவதில் இரண்டு நாடுகளின் கடப்பாட்டினையும் இந்த கலந்துரையாடலின் போது இரண்டு தலைவர்களும் உறுதிப்படுத்திக் கொண்டதாகவும், இந்த தொலைபேசி கலந்துரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.