வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறைக்கு, தென்கொரியா ஒரு பில்லியன் டொலர்களை விலையாக தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
நேற்று ஊடகவியலாரைச் சந்தித்த போதே இந்த ஏவுகணை எதிர்ப்புக் கவன் அமைப்பதற்கான மொத்த செலவினங்களையும் தென் கொரியா அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – தென் கொரியா இடையில் கடந்த ஐந்தாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த ‘வர்த்தக தாராளமயம்’ என்ற கொள்கையை இனியும் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், முந்தைய ஆட்சிக் காலத்தின்போது கடந்த 2011ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனால் நாடாளுமன்றில் ஒப்புதலை பெறுவதற்கு முன்னர் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை தம்மால் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, வட கொரியாவின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தென் கொரியா அமைக்கும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு, அமெரிக்க அரசு எதற்காக சுமார் ஒரு பில்லியன் டொலர்கள் அளவிலான பணத்தை செலவழிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் எதிரியின் ஏவுகணைகளை வான்வெளியில் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் படைத்த இந்த கவனுக்கான விலையை அமெரிக்காவுக்கு தென் கொரியா அளிக்க வேண்டும் என்று தென்கொரிய அரசிடம் தான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.