கச்சதீவை மீட்டால் மாத்தரமே தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் அமைதியையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்த முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக கேட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரவு தலைவர் அப்துல் கலாமின் நினைவாக அமைக்கப்பட்ட மணி மண்டபம் நேற்று இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழக முதல்வர், தமிழகத்தில் ஐந்து கடலோர மாவட்டங்களில், 305 மீனவ கிராமங்கள், 3 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாக சுட்டிகாட்டினார்.
மேலும் இலங்கை கடற்படையினர், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழக மீனவர்களை அடிக்கடி சிறைபிடித்து செல்வதாகவும், இலங்கை அரசின் பிடியில் உள்ள 75 தமிழக மீனவர்கள் மற்றும் 149 படகுகளை மீட்க இலங்கைக்கு பிரதமர் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.